பாரிசிலுள்ள ஒரு La Banque Postale வங்கியில் எட்டு வாடிக்கையாளர் கணக்குகளிலிருந்து சுமார் 123,000 யூரோக்களை மோசடி செய்ததாக நான்கு பேரை Melun (Seine-et-Marne) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு, Moissy-Cramayel (Seine-et-Marne) நகராட்சி காவல்துறை அதிகாரிகள் தெருவில் எட்டு அடையாள அட்டைகளைக் கொண்ட ஒரு உறையைக் கண்டெடுத்தனர். அதில் எல்லா அடையாள அட்டைகளிலும் ஒரே புகைப்படம் இருந்தது!
அவர்கள் இந்த போலி அட்டைகளை Melun Val de Seine நகர்ப்புற காவல் நிலையத்தில் உள்ள தங்கள் சக காவலர்களிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் நீண்ட, சிக்கலான விசாரணை துவங்கினர்.
ஐந்து அடையாள அட்டைகளில் இருக்கும் ஒரே நபரை காவல் துறையினர் இறுதியாக அடையாளம் கண்டுள்ளனர். Savigny-sur-Orge (Essonne)-இல் வசித்து வரும் 31 வயது நபர்.
குற்ற ஆவணங்களில் 43 முறைக்கும் குறையாமல் அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர். மேலும், மூன்று அடையாள அட்டைகளில் இருக்கும் நபர்களையும் அடையாளம் கண்டுள்ளனர். 28 வயது பெண், 22 வயது ஆண் மற்றும் 38 வயது நபரொருவர் என மூவரை கண்டுபிடித்துள்ளனர்.
முன்னாள் ஊழியர்
இவர்களில் ஒருவர் La Banque postale வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிபவராவார்.
இந்த போலி அடையாள அட்டைகள் எதற்காக பயன்படுத்தப்பட்டன என்பதையும், மோசடியின் பொறிமுறையையும் கண்டறிய விசாரணைகள் உதவியுள்ளன.
அந்த ஊழியர் வங்கியிலிருக்கும் மிகப்பழமையான, நிறைய பணமுள்ள வங்கி கணக்குகளை குறித்துக்கொண்டு, அவர்கள் பெயரில் போலி அடையாள அட்டைகளை தயாரித்து அவருடைய கூட்டாளிகளிடம் கொடுத்துள்ளார். அவர்கள் அதே அடையாள அட்டை மற்றும் ஆவணங்களுடன் வங்கியில் புது கணக்குகளை உருவாக்கி, தங்களுடைய சொந்த கணக்குகளுக்கு உண்மையான வாடிக்கையாளர்களின் கணக்குகளிலிருந்து பணத்தை மாற்றியுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட ஆறு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உள்ளிட்ட எட்டு வாடிக்கையாளர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் இருவர் Noisy-le-Grand (Seine-Saint-Denis)-யிலும், இருவர் Créteil (Val-de-Marne)-லும், ஒருவர் Athis-Mons (Essonne)-லும், மேலும் இருவர் பாரிசின் 5ஆம் மற்றும் 13ஆம் வட்டத்திலும் வசித்து வருகிறார்கள். அவர்களும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
இதுவரை 123,000 யூரோக்கள் மோசடி செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இந்த மோசடி எப்படி நடந்தது என்பது குறித்து La Banque postale நிர்வாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் காவல்துறையினர் அவர்களை கைது செய்து தற்காலிகமாக விடுவித்துள்ளானர். இருப்பினும், வரும் மே மாதம் Evry (Essonne) குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.