அணுசக்தி நிலையங்களில மின் உற்பத்தி அதிகரிக்க துவங்கியிருப்பதாலும், மின்னாற்றல் நுகர்வைக் குறைப்பதற்காக பொதுமக்களின் சீரிய முயற்சிகளின் பலனாக, இந்த குளிர்காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின் வெட்டுக்களுக்கு சாத்தியமில்லை என்று பிரெஞ்சு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
‘இந்த குளிர்காலத்தை போதுமான மின் சேமிப்புடன் கடந்துவிடுவோம் என நம்புகிறேன். இருப்பினும், நாம் விழிப்பாக இருக்க வேண்டும்’ என்று பிரான்சின் சூழலியல் அமைச்சர் ஆக்னேஸ் ருனாசர் பேட்டியளித்துள்ளார்.
‘பராமரிப்பின் காரணமாக மூடப்பட்டிருந்த அணுசக்தி உற்பத்தி நிலையங்கள் தற்போது திறக்கப்பட்டிருப்பதால் நிலைமை சீராகி வருகிறது. இருப்பினும், மின்னாற்றலை குறைவாக பயன்படுத்தும் வழக்கத்தை மக்கள் தொடர வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.
எரி ஆற்றல் பயன்பாட்டை பிரான்ஸ் ‘7 GW’ அளவு குறைத்துவிட்டது. இது ஏழு அணுசக்தி நிலையங்களின் மின் உற்பத்திக்கு சமமானது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது எரிசக்தி பயன்பாடு 8 முதல் 9 சதவிகிதம் குறைந்திருக்கிறது.
பிரெஞ்சு அரசாங்கம் எரிசக்தி பயன்பாடு, மின் வெட்டு குறித்த தகவல்களுக்கு EcoWatt செயலியை அல்லது வலைதளத்தை பயன்படுத்த கூறியுள்ளது.