நபரொருவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் Maison-alfort பகுதியில் நடந்துள்ளது. அவரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கிய காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
47 வயதான அந்த நபர் 9 மிமீ கைத்துப்பாக்கியால் தற்கொலைக்கு முயன்றுள்ளார் அதோடு தடுக்க வந்த காவல்துறையினர் நோக்கியும் துப்பாக்கியை நீட்டி சுட முயற்சித்துள்ளார். அவருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தான் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக தனது வீட்டிலிருந்து கைத்துப்பாக்கியுடன் வெளியேறிய நபரொருவரை பற்றி காவல்துறைக்கு குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். அவர் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் ஈடுபடுபவராவார்.
காவல்துறையினர் அவருடைய காரை கண்டுபிடித்தபோது காரில் யாரில் யாரும் இல்லை. காரிலிருந்து சிறிது தொலைவில் தண்டவாளத்தில் அந்நபர் நின்றுள்ளார். அந்த பாதையில் இரயில் சேவையும் நிறுத்தப்பட்டிருந்தது.
இருட்டில் இருந்த அவரை ஒரு காவலர் நெருங்க முயற்சிக்கும்போது இரு முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக செயல்பட்ட குற்ற தடுப்பு படையினர் குண்டு துளைக்காத பாதுகாப்பு ஆடைகளையும், தடுப்புகளையும் கொண்டு அவரை நெருங்கியுள்ளனர். அங்கு அவர் பாதி சுய நினைவுடன் மட்டுமே இருந்துள்ளார். துப்பாக்கியால் சுட்டதில் தலையில் படுகாயமடைந்த அவரை காவல்துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் Créteil-யில் உள்ள ஒரு மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்துள்ளனர்.
‘குற்றத்தடுப்பு பிரிவினர் வெறும் குற்றங்களுக்கு எதிராக மட்டும் போராடுவதில்லை, அதோடு உயிர்களையும் காப்பற்ற முயற்சிக்கின்றனர்’ என்று காவல்துறை நல சங்கத்தின் தேசிய செயலாளர் லிண்டா கெபாப் தெரிவித்துள்ளார்.