பிரான்சில் நகர மன்ற தலைவர்களாக இருக்கும் மேயர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் பல்வேறு தாக்குதல்களையும், மிரட்டல்களையும் சந்தித்து வருவதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
அலுவலர்கள் மேல் நடத்தப்படும் தாக்குதல்கள் 2022-ஆம் ஆண்டு 32 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும், இந்த ஆண்டு மேற்கொண்டு 15 சதவிகிதம் உயரக்கூடும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேயர்கள் நல கூட்டமைப்பின் 105வது மாநாடு இன்று துவங்கியுள்ள நிலையில், பிரான்சின் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் அளவு உயர்ந்திருப்பது குறித்து பேசுபொருளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பிரான்சின் சியான்ஸ் போ (sciences po) ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வுகள் வெளியிடப்பட்டன.
அதில் பிரான்சில் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்கள் 69% சதவிகிதத்தினர் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
39 சதவிகிதத்தினர் தாங்கள் பல அவமானங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும், 37 சதவிகிதத்தினர் தாங்கள் சமூக ஊடக தாக்குதலுக்கு இலக்கானதாகவும் கூறியுள்ளனர். மிக அரிதாக நேரடி வன்முறை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
2022-ஆம் ஆண்டு மட்டும் நகர மன்ற தலைவர்களான மேயர்கள் மீதான தாக்குதல்கள் 32 % உயர்ந்துள்ளாதாவும், 2265 புகார்கள் பதியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இந்த ‘தாக்குதல்களின்’ அளவு 15 சதவிகிதம் உயரக்கூடும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நகரமன்ற தலைவர்கள் தங்கள் பணியிலிருந்து விலகுவது 30 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், 2020ஆம் ஆண்டு முதல் 1300 பணி விலகல்கள் நிகழ்ந்துள்ளதாகவுல் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது மக்களின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாகவும், அதை நிறைவு செய்வதில் பல கடினங்கள் இருப்பதாகவும் அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
‘அவர்களின் ஊதிய பற்றாக்குறை குறித்த கோரிக்கை ஏழாம் இடத்தில் தான் உள்ளது. என்னென்ன மாற்றப்பட வேண்டுமென கேட்டதற்கு தங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசு உயரத்த வேண்டும்’ என்று அவர்கள் கூறியதாகவும் கூறியுள்ளார்.
சராசரியாக 60 வயதுடைய மேயர்களில், பத்தில் எட்டு பேர் ஆண்களாகவும், அதில் 40 சதவிகிதத்தினர் ஓய்வு பெற்றவர்களாகவும் உள்ளனர். அதோடு, அவர்கள் வாரத்தில் சராசரியாக 32 மணி நேரம் பணி செய்வதாகவும், சராசரி அளவு ஊதியம் பெறுவதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.