பிரான்சில் இம்மானுவேல் மக்ரோன் அரசின் புதிய ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக வேலைநிறுத்தங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. கடந்த ஜனவரி 19 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தமும் நிறைய போராட்டங்களும் நடைபெற்றன.
கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காத நிலையில் CGT தொழிற்சங்கம் வரும் 31 ஆம் தேதி வேலைநிறுத்ததிற்கு அழைத்துள்ளது. முதற்கட்டமாக சரக்குந்துகள் வரும் 30ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அடுத்ததாக, பல்துறைகளை சார்ந்தவர்களும் வரும் ஜனவரி 31, செவ்வாய்க்கிழமையன்று பெரியளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று அத்தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அவர்களின் எதிர்ப்பார்ப்புப்படி சாலை போக்குவரத்து, நகர போக்குவரத்து, வாகனங்கள், சரக்குந்துகள், வாடகையுந்துகள் (Taxis), பொது விமான போக்குவரத்து ஆகிய துறைகளை சேர்ந்தவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என கருதப்படுகிறது.
தொடர்வண்டி ஊழியர்களும் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர். SNCF உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை பயனளிக்காததால், CGT தொழிற்சங்கம் வருகின்ற புதன்கிழமை, ஜனவரி 25,2023 மாலை ஏழு மணி முதல் வியாழக்கிழமை, பிப்ரவரி 2,2023 காலை எட்டு மணி வரை ஒரு வாரக்காலத்திற்கு வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இப்போராட்டத்தில் சம்பளம், ஊக்க சம்பளம் (Bonus), வேலைவாய்ப்பு, பணி ஓய்வு, பணிக்கொடைகள், பணிச்சூழல்கள், பணி அங்கீகாரம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
கல்வித்துறையில் பெரும் தொழிற்சங்கமான UNSA, தற்போதைக்கு ஜனவரி 31 வரை வேறெந்த வேலைநிறுத்தத்திலும் ஈடுபடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது. ‘இருப்பினும் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், பரப்புரைகள் ஆகிய நடைபெறும்’ என அதன் பொதுச்செயலாளர் பிரெதரிக் மர்ச்சாந்த் தெரிவித்துள்ளார்.
CGT-யின் துறைமுக ஊழியர்கள் கூட்டமைப்பு துறைமுக ஊழியர்களை 24 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு அழைத்துள்ளது.
பருவக்கால ஊழியர்களுக்கு பணியில்லா நேரங்களில் உதவிகள் வழங்க கோரி பனிச்சறுக்கு விடுதிகளின் ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அழைக்கப்பட்டுள்ளனர்.
பதினொரு இலட்சத்திற்கும் அதிகமானோர் ஜனவரி 19 அன்று நடைபெற்ற தேசிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. வேலைநிறுத்தம் போராட்டம் வெற்றி என அறிவித்திருந்த தொழிற்சங்கங்கள், ஜனவர் 31, வியாழக்கிழமை அன்று மீண்டும் வேலை நிறுத்த போராட்டம் செய்யப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.