Saint-Brieuc-யில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 24 வயதுடைய ஆண் ஒருவர் தன்னுடைய மனைவி, குழந்தை, மாமியார் ஆகியோரை வேட்டைத் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இக்கொலைச் சம்பவத்தில் 22 வயதுடைய இளம்பெண்ணும் அவருடைய மூன்று வயது பெண் குழந்தையும் கொல்லப்பட்டுள்ளனர். முதிய பெண்மணி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து குடியிருப்புவாசிகள் கூறும்போது அவ்வீட்டிலிருந்து முன்னதாக கடும் விவாதங்கள் நடந்த சத்தம் கேட்டதாகவும், துப்பாக்கி சூடு நடப்பதற்கு முன்பு ஒரு பெண் உதவி கேட்டு கத்தியதாகவும், உடனடியாக அவசர சேவைக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தனர். காவல்துறையினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது துப்பாக்கியால் சுட்ட நபர் உட்பட மூவரை இறந்த நிலையில் கண்டுள்ளனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முதிய பெண்மணி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவ்வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அமைதியாக இருந்த குடும்பத்தினர் அவர்கள் என்றும், துப்பாக்கி சூடு நடைபெற்ற போது பலருக்கு பட்டாசு வெடித்த சத்தம் போன்று கேட்டதாகவும் குடியிருப்புவாசிகள் கவலையுடன் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சோகமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.