ஸ்ட்ரஸ்பூரில் தனது வளர்ப்பு நாயை மாடியிலிருந்து வீசி கொலை செய்ததாக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பன்னிரெண்டு மாதம் சிறையும், வளர்ப்பு விலங்கை வைத்துக்கொள்வதற்கு நிரந்தர தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை, புல்டாக் கலப்பின நாயொன்று குற்றவாளியிருக்கும் குடியிருப்பின் கீழ் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பக்கத்து வீட்டிலிருந்தவர், குடிபோதையில் ஒரு நபர் நாயை ஐந்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசியதை கண்டதாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர் நாய் கீழே விழுந்து இறந்தது தனக்கு தெரியாது, தான் நாயை தூக்கி வீசவில்லை, ஜன்னல் அருகே வைத்திருந்த உணவை உண்ணப்போகும் போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
பிரெஞ்சு சட்டத்தின்படி விலங்குகளை கொடுமைப்படுத்தி கொல்லும் குற்றத்திற்கு ஐந்தாண்டு சிறையும், 75000 யூரோ அபராதமும் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.