தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான கோரிக்கைகள் வந்துள்ளதாகவும், அவற்றைப் பரிசீலிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, “ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா?” “கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படுமா?” என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பினர்.
இவற்றுக்குப் பதில் அளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ‘ வருவாய்த்துறை அரசாணை எண்.279-ன் படி ஒரு மாவட்டத்தை உருவாக்குவதற்கான சட்ட ரீதியான தகுதிகளை பூர்த்தி செய்யாததால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்க முடியாது. கோவில்பட்டி, பழனி, பொள்ளாச்சி உள்பட 8 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதுதவிர, வருவாய்க் கோட்டம், வட்டங்களைப் பிரிப்பது குறித்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.
புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பாக நிதிநிலை அடிப்படையில் பரிசீலித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய முடிவெடுத்து அறிவிப்பார்’ என்று கூறினார்.
தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் இருந்துவந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாட்டில் புதிதாக 6 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன்படி தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. கடைசியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மாவட்டங்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரிக்கும்.