இங்கிலாந்தில் புதிய அரச பரம்பரை பதவியேற்பதைக் கொண்டாடும் வகையில் மன்னர் மூன்றாம் சார்லசின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைப்பதற்காக 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அரியணையை கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக அலங்கரித்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார்.
இதையடுத்து, புதிய மன்னராக அவருடைய மகன் மூன்றாம் சார்லஸ் அறிவிக்கப்பட்டார். அதிகாரப்பூர்வமாக அவர் மன்னராக பதவியேற்க உள்ள விழா அடுத்த மாதம் 6ம் தேதி நடக்கவுள்ளது.
லண்டனில் உள்ள புகழ்பெற்ற வெஸ்ட்மினிஸ்டர் அபே கட்டிடத்தில் பிரிட்டிஷ் பாரம்பரிய முறைப்படி பிரமாண்டமாக விழா நடக்கவுள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதோடு, பதவியேற்க உள்ள மன்னர் சார்லசின் புகைப்படத்தை உயர் நீதிமன்றங்கள், பள்ளிகள், காவல் நிலையங்கள் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் எட்டு மில்லியன் பவுண்டுகள் (80 கோடி ரூபாய்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசின் இம்முடிவிற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரிபப்ளிக் அமைப்பின் செயற்பாட்டளரான கிரகாம் சுமித் ‘இது தேவையற்ற வீண் செலவு’ என்று விமர்சித்துள்ளார்.
‘முடி சூட்டு விழாவிற்கே £50 மில்லியன் முதல் £100 மில்லியன் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் ஒரு ஊழல்’ என்று கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் அரசு ஏற்கனவே மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத்தின் புகைப்படத்தை பல அரசு அலுவலகங்களில் வைத்துள்ளது. அந்த பாரம்பரியத்தை பின்பற்றி சார்லசின் புகைப்படம் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.