வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.
தொரியன் (Dorian Damelincourt) என்ற தீயணைப்பு வீரர் ஏனைய 200 வீரர்களுடன் சான் தெனியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கம் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் மயங்கி விழுந்த அவ்வீரருக்கு சக தீயணைப்பு வீரர்கள் முதலுதவி வழங்கினர். மேலும், மருத்துவ குழு அவரை மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்தனர்.
அங்கு அதிகாலை 5:45 மணியளவில் அவர் உயிரிழந்ததாக பாரிஸ் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
Source : Defence.gouv.fr
‘அவர் மயக்கமடைந்ததும் சக தீயணைப்பு வீரர்கள் அவரை காப்பாற்ற பெரிதும் முயன்றனர். ஆனால், எங்களுக்கு எதுவும் பலனளிக்காது என்று உடனடியாக புரிந்தது!’ என அங்கு வசித்தவர் ஒருவர் தெரிவித்தார்.
‘இரண்டு பெரும் வெடிச்சத்தங்கள் கேட்டன. அது எதோ வெடிச்சத்தம் என நினைத்தோம். ஏனெனில் கடந்த சில நாட்களாக சுற்றுவட்டாரத்தில் இது போன்று நிறைய முறை சத்தங்கள் ஏற்பட்டுள்ளன. தீ அபாய ஒலி திடீரென ஒலித்தது. தீ வேகமாக கீழ்த்தளத்திலிருந்து பரவியது. பெரும் புகையும் ஏற்பட்டது’ என்றும் கூறினார்.
இறந்த தீயணைப்பு வீரருக்கு பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
‘தீயணைப்பு வீரர்களின் அர்ப்பணிப்பு எவ்வளவு அளப்பரியது என்பது எங்களுக்கு தெரியும். இந்த வேதனையான சம்பவம் அதை எங்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறது’ என்று அவையின் துணைத்தலைவர் நைமா முச்சு தெரிவித்துள்ளார்.
தீயணைப்பு வீரர் அங்கு ஏற்பட்ட வெடிச்சத்தத்தால் இதயம் செயலிழந்து மரணத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.