ChatGPT பற்றி அறிந்து கொள்ள Chat Bot என்ற நுட்பம் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
Chat Bot என்றால் என்ன?
நீங்கள் ஒரு மடிக்கணினியை மின் வர்த்தகம் (Online Shopping) வழியாக வாங்குகிறீர்கள். வாங்கி ஒரு சில மாதங்களில் அது இயங்க மறுக்கிறது. அதை சரி செய்து பயன்படுத்த, அதன் பயனர் வழிகாட்டியைப் (Users Manual) புரட்டிப் பார்க்கிறீர்கள். அங்கே பயனரின் தொழில்நுட்ப உதவிக்கான (Technical Support) தொடர்பு எண் தரப்பட்டுள்ளது. அந்த எண்ணை அழைக்கிறீர்கள்.
எதிர் முனையில் ஒருவர் பேசுகிறார். அவர் ஏன் இயங்கவில்லை என்ற காரணத்தைக் கண்டறிய ஒவ்வொரு வினாவாகக் கேட்கிறார். நீங்களும் சளைக்காமல் பதிலளிக்க, கணினி இயங்க மறுப்பதன் காரணத்தைத் தொலைபேசி வாயிலாகவே கண்டறிந்து, அதற்கான தீர்வையும் தர, அவரின் தொலைபேசி வழி வழிகாட்டலைப் பயன்படுத்தி, நீங்கள் முயற்சி செய்ய கணினி பழையபடி இயங்க ஆரம்பக்கிறது.
இத்தகைய அணுகுமுறையை பல்வேறு தருணங்களில், பல்வேறு பயனர் உபகரணங்களை (Consumer Products) பயன்படுத்தும் போது உணர்ந்திருப்போம். இதுவே வழக்கமான ஒன்று (Traditional Approach).
ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு, மின் வர்த்தக நிறுவங்கள், தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்ற பெரும் நிறுவனங்கள் இத்தகைய பயனர் உதவி மையங்களை அமைத்து அதன் வழியாக, இத்தகைய உதவிகளைச் செயல்படுத்துவர். இவர்களை Customer Support Executives அல்லது Customer Support Agents என்று அழைப்பது வழக்கம்.
கணினிக்கு முன்னால் அமர்ந்து, பயனரிடமிருந்து வரும் எண்ணற்ற தொலைபேசிகளுக்குப் பதில் வழங்கி, அவர்களுக்கானச் சிக்கலைத் தீர்ப்பது அவர்களது தலையாய பணி.
அவர்கள் எவ்வாறு பயனர் குறைகளுக்கு தீர்வை வழங்குகிறார்கள்?
அடிக்கடி பயனர் கேட்கும் வினாக்களுக்கான (Frequently Asked Questions – FAQ) பதில்களோ, பொதுவாக நிகழும் குறைகளுக்கான தீர்வுகளோ தரவுகளாக (Data) – தங்கள் நிறுவன தரவுத் தொகுப்பில் (Database) சேமிக்கப்பட்டிருக்கும். இத்தகைய தரவுத் தொகுப்பை கணினி வழியாக இயக்கி, பயனர் சிக்கலுக்கானக் குறியீடுகளை (key word) உட்செலுத்தி, தேடி கணினியின் திரையில் தெரியும் விடைகளைப் பதிலாகத் தருவார்கள். இதற்கானப் பயிற்சிகளை நிறுவனம் அவர்களுக்கு வழங்கி, அவர்களை கற்க வைத்து அவர்களைத் தயார்படுத்தும். அவர்களும் போதுமான பயிற்சியின் வழியாகத் திறம்பட செயலாற்றுவர். ஒரு வேளை தரவுத் தொகுப்பில் பயனரின் சிக்கலுக்கானத் தீர்வு இல்லையெனில், அதைப் புதியதெனக் கருதி அதை உள்ளீடு செய்து கொள்வர். நாட்கள் ஆக ஆக, தரவுத் தொகுப்பு – தரவுகளால் நிரம்பியிருக்கும். எனவே இத்தகைய தரவுகளே, தொழில் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமையும். ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் பயனர் குறித்த தரவுகளையும், தங்களின் Consumer Product குறித்த தரவுகளையும் பத்திரப் படுத்தி சேமித்து வைப்பது வழமை.
மேற்கண்ட செயல்பாட்டை (Process) புரிந்து கொண்டால் Chat Bot குறித்துப் புரிவது சுலபம்.
Chat Bot:
நாம் இயந்தர மனிதன் (Robot) குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் அறிந்திருப்போம். Robot போலவே, கணினித் தொழில்நுட்பம் வழியாக, பயனர்களுடன் உரையாடும் செயலைச் செய்யும் நுட்பமே / செயலியே / நிரலே Chat Bot. மேற்கண்ட எடுத்துக்காட்டில் உள்ளதை, கணினி நிரல் – பயனர்களுடன் எழுத்து / குரல் வழியாக உரையாடி, பயனர்களுக்கான தீர்வு / மற்றும் புதிதாய் வரக்கூடிய பயனர்கள் (Potential Customer) பயன்பெறும் விதமாக வழிகாட்டுவதே Chat Bot – ன் நுட்பம்.
முக்கிய நிறுவனங்களின் வலைத்தளங்களில் Customer Support அல்லது Sales Support பகுதிகளில் Virtual Agent / Virtual Assistant என்ற ஒரு பயனர் உரையாடல் செயலியை நாம் பார்த்திருக்கலாம்.
தானியங்கியாக, உரையாடலில் பயனர் அறிய விரும்பும், அல்லது பயனரின் சிக்கலுக்கானத் தரவுகளை உள்ளீடாகக் கொண்டு அவற்றை குறியீடுகளாக்கி (Key Word) தரவுத் தொகுப்பில் துலாவி – பயனர்களுக்கானப் பொருத்தமான விடைகளைத் தரும் வண்ணம் இத்தகைய Chat Bot-கள் வடிவமைக்கப் பட்டிருக்கும். மனித மூளை செயலாற்றுவது போல செயல்படுவதால் இந்த நுட்பம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligene / AI ) என்று அழைக்கப்படுகிறது. தரவுகளைத் திரட்ட, தேட, பதிலளிக்கக் கணினி நுட்பத்தின் வழியாக Chat Bot -கள் தயார்படுத்தப்படும் / கற்றுக் கொடுக்கப்படும் இத்தனைய நுட்பமே Machine Learning / ML என்றழைக்கப்படுகிறது.
(AI / ML என்ற நுட்பம் மேலோட்டமாகப் புரிந்து கொள்ள சுலபமாக இருப்பினும், இந்த நுட்பத்தை நுட்பமாக அறிந்து, கணினிச் செயலிகளை வடிவமைக்க சிறந்த பயிற்சி, அனுபவம், கணினி நிரல்களை (Advanced Java, Python Computer Coding) திறம்பட எழுதும் திறமையும் அவசியம். எதிர்காலத்தில் மென்பொருள் செயலிகளில் இந்த நுட்பம் அதிகமாகப் பயன்படுத்தப்பட இருப்பதால் AI / ML நுட்ப வல்லுனர்களுக்கானத் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது).
நிறுவனங்களின் தரவுத் தொகுப்பு (Database) போன்றே கட்டற்ற தரவுகளால் நிரம்பியது இணையம் (Internet). பயனர் கேட்கும் வினாக்களை, நிறுவங்களின் Virtual Agent போலவே, இணையத்தில் தேடி அவர்களுக்கு Artificial Intelligence மற்றும் Language Model நுட்பத்தைச் செயல்படுத்தித் தரவுகளை வழங்கும் Chat Bot தான் ChatGPT (Chat Generative Pre-Trained Transformer).
ஒரு மனிதருடன் இணையம் வழி உரையாடல் செய்பவரைப் பிரதிபலிப்பதே முக்கிய செயல்பாடு என்றாலும், ChatGPT பல்துறை திறன்களைக் கொண்டது. எடுத்துக்காட்டாக, இதனைப் கணினி நிரல்களை வடிவமைக்கலாம். கணினி நிரல்களில் பிழைகளைப் பிழைத்திருத்தம் செய்யலாம் (Debbugging & Error Fixing). இசையமைக்கலாம், கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதலாம் என இதன் பயன்பாடுகள் விரிந்து கொண்டே செல்கிறது.
(மேலும் தொடரும்)
குறிப்பு:
- Al / ML நுட்பம் பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
- இப்பதிவை வாசிக்கும் நண்பர்களின் புரிதலுக்காக கணினித் தொழில்நுட்பம் குறித்த கருத்துகள், ஒரு பொதுவான மனிதரின் பார்வையில் (Lay man view) எழுதப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் பொறுத்தருள்க.
மேலும் விவரங்களுக்கு:
https://en.m.wikipedia.org/wiki/ChatGPT