லீல்-ஐரோப்பா இரயில் நிலையத்திற்கு விடுக்கப்பட்ட தாக்குதல் மிரட்டலையடுத்து அங்கு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
பிரான்சின் லீல் (Lille) நகரில் உள்ள இரயில் நிலையம் இன்று திடீரென்று மூடப்பட்டு, அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
SNCF இரயில் சேவைக்கு வந்த அழைப்பில், இரயில் நிலையத்தில் தாக்குதல் நடக்க உள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தீவிரவாத தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அங்கு வர வேண்டிய இரயில்கள் அனைத்தும் வேறொரு இரயில் நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.
பயணிகளின் உடைமைகள் சோதிக்கப்பட்டதுடன் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன.
நீண்ட நேர தேடுதல்களுக்கு பின் மிரட்டல் அழைப்பு புரளி என தெரியவந்தது.
இதனையடுத்து அலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த நபரையும் அவருடன் பயணித்த பெண்ணையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான வகையில் அவர்களிடம் எதுவுமில்லை என்று தெரிவித்துள்ள காவல்துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிரட்டல் அழைப்பு புரளி என்பதையறிந்து பாதுகாப்பு சோதனைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.