Seine-et-Marne: Coulommiers-இல் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் வீட்டிலிருந்த மூன்று நாய்கள் தீயில் சிக்கி பலியாகியுள்ளன.
அதிகாலை 2.50 மணியளவில் அவர்கள் வீட்டில் தீ பற்றியுள்ளது. வீட்டின் உரிமையாளரான 42 வயதான பெண்மணி நல்வாய்ப்பாக தீயிலிருந்து தப்பியுள்ளார். 22 மற்றும் 12 வயதுடைய அவருடைய இரு மகன்களும் தீயினில் சிக்கி காயமடைந்துள்ளனர். தரைத்தளத்திலும் முதல் தளத்திலும் ஒரே நேரத்தில் தீப்பிடித்ததாக அவ்விபத்தை நேரில் கண்டவர் தெரிவித்துள்ளார். ஆறு தீயணைப்பு வண்டிகளும், காவல் துறையினரும் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் போராடி காலை 5 மணியளவில் தீயை முற்றிலுமாக அணைத்துள்ளனர். வீடு முழுவதுமாக சேதமடைந்துள்ளது.
22 வயதான இளைஞர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். சிறுவனுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. தீ விபத்தின் போது வீட்டிற்குள் 4 நாய்கள் இருந்தன. அதில் ஒரு நாய் மட்டும் தப்பித்துள்ளது. மூன்று நாய்கள் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
உள்ளூர் நிர்வாகம் அவர்களுக்கு உதவும் வகையில் தற்காலிகமாக தங்கும் விடுதியில் தங்க ஏற்பாடு செய்துள்ளது.
தீ விபத்தினால் உண்டான சேதத்தின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை.