பிரான்சின் Lyon நகரில் விலையுயர்ந்த Audi காரை அதிவேகமாக தாறுமாறாக ஓட்டிய நபரொருவர் கார்களை இடித்து தள்ளி விபத்து ஏற்படுத்தியதில் முதிய பெண்மணி ஒருவர் காயமடைந்துள்ளார். காரை ஓட்டியவரும், காரில் பயணித்தவர்களும் தப்பியோடிவிட்டனர்.
மாலை ஆறு மணியளவில் அதிவேகத்தில் சென்ற ஜெர்மன் கார் ஒன்றை காவல்துறையினர் கண்டு தடுத்த நிறுத்த முயன்றுள்ளனர். அவர்களை கண்டதும் வேகமெடுத்த கார் சிட்டாக பறந்துள்ளது. காரை விரட்டி சென்ற காவல்துறையினர் அந்த கார் இரண்டு கார்கள் மீது மோதி விபத்தில் சிக்கியதை கண்டறிந்துள்ளனர். கார்கள் மோதியதில் காயமடைந்த 78 வயதான பெண்மணியை மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர், காரின் ஓட்டுநரையும், காரில் பயணித்தவர்களையும் தேடியுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்தபோது காரிலிருந்த தன்னுடைய அலைபேசியை எடுக்க அந்த காரின் ஓட்டுநர் திரும்ப வந்துள்ளார். காயமடைந்திருந்த அவரை காவல்துறையினர் உடனே கைது செய்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.