மதுக்கடைக்கு வெளியே நின்றிருந்த கூட்டத்தினுள் திட்டமிட்டு காரை ஓட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பிரான்சின் எவ்ரெக்ஸ் நகரத்தில் நடைபெற்றுள்ளது.
பிரான்சின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள எவ்ரெக்ஸ் (Evreux) நகரில், மதுபானக் கடைக்கு வெளியே ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு, ஒருவர் வேண்டுமென்றே காரை கூட்டத்தினுள் செலுத்தியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்; அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சனிக்கிழமை அதிகாலை 4:00 மணியளவில், எவ்ரெக்ஸ் நகரின் மையப் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் தீவிரவாதம் அல்லது இனவெறி போன்ற நோக்கங்கள் எதுவும் இல்லை என்று பிரான்ஸ் வழக்குரைஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
La Winery எனும் மதுபானக் கடைக்கு வெளியே ஒரு இளம் பெண்ணுக்கும் சில ஆண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் முற்றியதையடுத்து, கடையின் பாதுகாவலர்கள் வாடிக்கையாளர்கள் அனைவரையும் வெளியே அனுப்பியதாகவும் எவ்ரெக்ஸ் நகர அரசு வழக்கறிஞர் ரெமி கூட்டின் தெரிவித்துள்ளார்.
அப்போது, வெளியே நின்றிருந்த கூட்டத்தின் மீது அங்கிருந்த ஒருவர் காரை பின்னோக்கி எடுத்து வந்து அதிவேகமாக மோதியதில் இந்த கோரமான விபத்து நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக, கார் ஓட்டுநர் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது ஒரு துயரமான நிகழ்வு என்றும், இதற்குத் தீவிரவாத நோக்கம் எதுவும் இல்லை என்றும் நகர மேயர் கை லெஃப்ராண்ட் (Guy Lefrand) தெரிவித்தார். மேலும், இந்த மதுபானக் கடைக்கு ஏற்கெனவே மோசமான பெயர் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.