வரும் பிப்ரவரி மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் பிரெஞ்சு சீசர்ஸ் விருது வழங்கும் நிகழ்வுக்கு பாலியல் குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அல்லது பாலியல் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்ற செயல்களில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்களை விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்போவதில்லை எனவும் தி பிரெஞ்சு சீசர்ஸ் அகாடமி தெளிவுபடுத்தியுள்ளது.
ஆஸ்கருக்கு நிகரான விருதாக பிரான்சில் கருதப்படுவது பிரெஞ்சு சீசர்ஸ் விருதுகள். கடந்த ஆண்டு நவம்பரில் நடிகர் சோபியான் பென்னசர் பல்வேறு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து சீசர்ஸ் அகாடமி அவரது பெயரை பரிந்துரை பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக தெரிவித்தது. ஆனால் தற்போது அவரது பெயர் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அமெரிக்க இயக்குநரான ரோமன் போலன்ஸ்கீ, கடந்த 2020இல் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார். ஆனால் இவர் கடந்த 1978ஆம் ஆண்டில் மைனர் பெண் ஒருவரிடம் பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, அந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு முன்னர் அமெரிக்காவிலிருந்து பிரானசுக்கு குடிபெயர்ந்தார்.
தற்போது பிரான்ஸில் வசித்து வரும் அவருக்கு, சிறந்த இயக்குனருக்கான விருது அறிவிக்கப்பட்டபோது பிரபலங்கள் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக வெளிநடப்பு செய்தனர். இந்த இரு சம்பவங்கள் காரணமாக நடப்பாண்டில் நடைபெற இருக்கும் பிரெஞ்சு சீசர்ஸ் விருதுகளில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.