மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலை புயலாக வலுப்பெற்றது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் என்று பெயரிடப்பட்ட அந்த புயல், இன்று சென்னை வழியே ஆந்திராவில் கரையை கடக்கிறது.
இதனால் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
கன மழையால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் நிரம்பி வருகின்றன.
பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளன.
இதனால் போக்குவரத்து இடையூறுகளும் ஏற்பட்டுள்ளன.
பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று ஏற்கனவே காவல்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கன மழை காரணமாக சென்னை வேளச்சேரி அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தரைக்குள் இறங்கியது.
இந்த கட்டிடத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருந்தனர். அவர்களில் இருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இக்கட்டிடத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது.
மேலும், ரயில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மிக்ஜாம் புயலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அடுத்த 12 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
நாளையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 110 கி மீ வேகத்தில் வீசுவதால், நாளை ஆந்திரம் மாநிலத்தில் உள்ள நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.