அமெரிக்காவில் விற்கப்படும் அரிசியில் ஆர்சனிக் (arsenic), கேட்மியம் (cadmium), உள்ளிட்ட உலோகங்கள் (heavy metals) அதிகளவில் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், மியாமி போன்ற 20 முக்கிய மெட்ரோ நகரங்களில் விற்பனை செய்யப்படும் அரிசிகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஆர்சனிக் (arsenic), கேட்மியம் (cadmium), காரியம் (lead), பாதரசம் (mercury) போன்ற அடர் கன உலோகங்கள் (heavy metals) அதிகளவில் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஹெல்தி பேபிஸ் (Healthy Babies), பிரைட் ஃபியூச்சர்ஸ் (Bright Futures) ஆகிய அமைப்புகள் குழந்தைகளின் உணவிலுள்ள நச்சு மிகுந்த வேதிப்பொருட்களின் தாக்கம் குறித்து நடத்திய ஆய்வில், அமெரிக்காவில் உள்ள கடைகளில் எடுக்கப்பட்ட அனைத்து அரிசி மாதிரிகளிலும் ஆர்சனிக் என்னும் அடர் உலோகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, அடர்த்தியான மூலக்கூறுகளும் அணு எடையும் கொண்ட உலோகங்களை அடர்/கன உலோகங்கள் என்று கூறுவர். அடர் உலோகங்கள் மனிதர்களுக்கு மிகவும் தீங்கானவை. இவற்றை மிக குறைந்த அளவில் உட்கொண்டாலும் உயிருக்கு பெரும் ஆபத்தை உண்டாக்கிவிடும்.
டிரேடர் ஜோஸ் (Trader Joe’s), பென்ஸ் (Ben’s), கோயா (Goya) போன்ற பிரபல பிராண்டுகள் உட்பட ஏராளமான பிராண்டுகளின் 105 வகையான அரிசி மாதிரிகள் சோதிக்கப்பட்டன. பரிசோதனை முடிவில் அவற்றில் 4 விதமான அடர் உலோகங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆர்சனிக் மற்றும் கேட்மியம் அளவுகள் மிக அதிகமாகவும் காரியம் மற்றும் பாதரசம் குறைந்த அளவில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு எடுக்கப்பட்ட அரிசி மாதிரிகளில் நான்கில் ஒன்றில் கனிம ஆர்சனிக் 100 ppm (parts per billion) அளவுக்கு மேல் இருக்கிறது என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஒட்டுமொத்தமாக எடுக்கப்பட்ட அனைத்து அரிசி மாதிரிகளிலும் ஆர்சனிக், காரியம், பாதரசம் முதலிய அடர் உலோகங்கள் சராசரியாக 63 முதல் 188 ppb வரை இருந்தன. எனினும் சிலவற்றில் 240 ppbக்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாம் அன்றாடம் உட்கொள்ளும் பல உணவுப் பொருட்களில் மிகக் குறைந்த அளவில் செயற்கையாக சேர்க்கப்பட்ட அல்லது இயற்கையாக உருவாகும் ஆர்சனிக் இருக்கும் என்று தேசிய சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் (FDA) 2021 ஆம் ஆண்டு வெளியிட்ட விதிகளின்படி குழந்தைகள் உட்கொள்ளும் அரிசி, தானியங்களில் உள்ள கனிம ஆர்சனிக்கின் அளவு 100 ppmக்கு அதிகமாக இருக்கக்கூடாது. எனினும் பொதுவாக உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளில் உள்ள ஆர்சனிக் அளவுகளுக்கென்று தனியாக எந்த வரையறையும் நிர்ணயிக்கப்படவில்லை. இது போன்ற உணவுகளை குழந்தைகள், சிறுவர்கள் அதிகளவில் உட்கொள்வதை இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுற்றுசூழல் பாதுகாப்பு முகமை (Environmental Protection Agency), ஆர்சனிக் என்னும் உலோகத்தை புற்றுநோய் காரணியாக வகைப்படுத்தியுள்ளது. இயற்கையாக சில கடல் உணவுகளில் உள்ள ஆர்சனிக்கை ஒப்பிடுகையில் செயற்கை ஆர்சனிக் மனிதர்களுக்கு மிக அதிக தீங்கை விளைவிக்கக்கூடியது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு கூறுகிறது.
இந்த ஆய்வறிக்கை குறித்து அமெரிக்க அரிசி கூட்டமைப்பு (the USA Rice Federation) கூறுகையில், உணவில் ஆர்சனிக் கலந்திருப்பது ஆபத்தான செய்தி தான் என்றாலும் பொது சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் இதை நாங்கள் பார்க்கவில்லை. தொடர்ந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்புடன் கைகோர்த்து அரிசியில் உள்ள ஆர்சனிக் அளவை கட்டுப்படுத்துவோம்’ என்று கூறியுள்ளது.
ஆர்சனிக் போன்ற அடர் உலோகங்களை தொடும்போதோ தொடர்ந்து நீண்டகாலமாக பயன்படுத்தும் போதோ நம் உடலுடன் தொடர்பு ஏற்பட்டு தோளின் நிறம் மாறி புண்கள் உண்டாகும். மேலும் உள்ளங்கைகளிலும் கால் பாதங்களிலும் தோல் கடினமாகிவிடும். நாளடைவில் இது தோல் புற்றுநோயாகவும் மாறலாம். அது மட்டுமின்றி நுரையீரல், சிறுநீரக புற்றுநோய் போன்றவற்றுக்கும் ஆர்சனிக் வழிவகுக்கும்.
உணவில் ஆர்சனிக் அளவை குறைக்க எண்ணுவோருக்கு ஹெல்த்தி பேபிஸ், பிரைட் ஃபியூச்சர் அமைப்புகள் சில பரிந்துரைகளை கூறுகின்றன:
அரிசியை பாஸ்தாவை போல் சமைக்கலாம் : ஒரு பங்கு அரிசிக்கு ஆறு முதல் 10 பங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, மீதம் உள்ள நீரை வடிகட்டி விட்டு உண்ணும் போது, அதில் உள்ள ஆர்சனிக் அளவு கணிசமாக குறைகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
அரிசிக்கு மாற்று : குயினோவா (quinoa), பார்லி (barley) மற்றும் குஸ்குஸ் (couscous) போன்ற மாற்றுக்களில் குறைந்தளவு ஆர்சனிக் உள்ளதை ஆராய்ச்சி சோதனை மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
நீங்கள் உண்ணும் அரிசியை கவனமாக தேர்ந்தெடுங்கள் : குறிப்பிட்ட சில வகை அரிசியில் அதிக அளவு அடர் உலோகங்கள் இருப்பதை இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது. எனவே கேல்ரோஸ் (Calrose), சூஷி (sushi), கலிபோர்னியாவில் விளையும் வெள்ளை அரிசி, தாய்லாந்து வகை அரிசி அல்லது இந்தியாவின் பாஸ்மதி அரிசி போன்ற மாற்று வகைகளை சிந்திக்கலாம். முக்கியமாக பழுப்பு நிற அரிசி, தென்கிழக்கு அமெரிக்காவில் விளையும் வெள்ளை வகை அரிசி, இத்தாலியின் அர்போரிரோ (risotto) அரிசி போன்றவற்றில் அடர் உலோகங்கள் அதிகமாக உள்ளது. இவற்றை தவிர்ப்பது நல்லது.