எரிபொருள் மானியத்தை பெற பயனாளிகள் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும், பணிக்கு செல்ல வாகனத்தை பயன்படுத்துவதாக அவர்கள் உறுதிமொழியளிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
வேலைக்கு செல்ல வாகனத்தை பயன்படுத்தும் ஒரு கோடிக்கும் மேலான பணியாளர்கள் 100 யூரோ மதிப்புடைய காசோலையை பெறுவார்கள். இதற்கான 1.5 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளாதாக பிரதமர் எலிசபெத் போர்ன் பிரான்சு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தற்போது எரிபொருள் ஒரு லிட்டருக்கு பத்து சாந்திம் (10 cents) மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ‘நூறு யூரோ காசோலை உதவித்திட்டம்’ சனவரி ஒன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் மற்ற மானியங்கள் நிறுத்தப்படும்.
எரிபொருளுக்கான நூறு யூரோ காசோலையை பெறுவது எப்படி?
பிரான்சு அரசின் உதவித்தொகையை பெற பிரெஞ்சு அரசின் வருமான வரித்தளத்தில் இருக்கும் https://www.impots.gouv.fr/indemnite-carburant-de-100-eu-comment-ca-marche பக்கத்திற்கு சென்று அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
பதிவு செய்ய உங்களுக்கு தேவையானவை :
உங்கள் வருமான வரி எண்
காரின் பதிவு எண்
உங்கள் வேலைக்கு செல்ல வாகனத்தை தான் பயன்படுத்துகிறீர்கள் என்ற உறுதிமொழி
இந்த உதவித்தொகை பிரான்சில் வரிசெலுத்துபவர்களின் ஐந்து வகைப்பாடுக்குள் இருப்பவர்களுக்கு முக்கியமாக, அடித்தட்டில் இருக்கும் குறைந்த குடும்ப வருமானமுடைய வகையினருக்கு கிடைக்கும்.
இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். தாங்கள் பயணம் செய்ததற்கான குறைந்தபட்ச கிலோமீட்டர்களுக்கான சான்றினை அரசிடம் சமர்பிக்க தேவையில்லை.
ஒரே வீட்டில் இருவர் வாகனத்தில் வேலைக்கு சென்றாலும் அவர்களும் இந்த எரிபொருள் உதவித்தொகைக்கு 200 யூரோ கேட்டு விண்ணப்பிக்கலாம்.
‘வேலையில்லாத மக்கள் வேலை தேடுவதற்காக வாகனம் தேவைப்பட்டால் அவர்கள் போல் ஆம்ப்ளுவா (Pôle emploi) மையத்தை தொடர்புகொள்ளலாம்’ என்று பிரதமர் போர்ன் கூறினார்.