பிரான்சில் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கிய மக்கள் போராட்டம், அந்நாட்டின் நிதிநிலைமைக்கு எதிராக பெரும் போராட்டமாக வெடித்துள்ளது.
சமூக வலைதளங்களில் “எல்லாவற்றையும் முடக்குங்கள்” என்ற கோஷத்துடன் தொடங்கிய இந்த இயக்கம், இன்று மக்கள் திரண்ட மாபெரும் போராட்டமாக மாறியுள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணம், பிரதமர் ஃபிரான்சுவா பய்ரூவின் புதிய தேசிய பட்ஜெட் திட்டம் ஆகும். இந்தப் புதிய நிதித் திட்டத்தை அவர் ஜூலை 15 அன்று அறிவித்தார். மேலும், பிரான்சின் கடன் சுமையைக் குறைப்பதற்காக, தேசிய பட்ஜெட்டில் சுமார் €438 பில்லியன் குறைக்கப்படும் என்றும் அறிவித்தார். இது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக, பட்ஜெட்டில் உள்ள மூன்று விஷயங்கள் மக்களின் எதிர்ப்பை மேலும் அதிகரித்துள்ளன:
இரண்டு தேசிய விடுமுறை நாட்களை நீக்குவது.
- ஓய்வூதியத் தொகையை முடக்கும் திட்டம்.
- சுகாதாரத் துறைக்கான நிதியில் €5 பில்லியன் குறைப்பு.
இவற்றால் அதிருப்தியடைந்த மக்கள் பலர் சமூக வலைதளங்களில் “புறக்கணிப்பு, கட்டுப்பாடின்மை மற்றும் ஒற்றுமை” (“Boycott, désobéissance et solidarité”) என்ற கோஷத்தை பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். இந்தக் கோஷம்தான் இன்று நாடே முடங்கும் அளவுக்குப் பெரும் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
போராட்டத்தின் பின்னணி
இந்தப் போராட்டத்திற்குப் பின்னணியில், எந்தவொரு அரசியல் கட்சி அல்லது தொழிற்சங்கத்துடனும் தொடர்பில்லாத சுமார் 20 பேர் கொண்ட குழு ஒன்று செயல்படுகிறது என பிரெஞ்சு நாளிதழ்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த குழு, சமூக ஊடகங்களான X (ட்விட்டர்), டிக்டாக் (TikTok), டெலிகிராம் (Telegram) மற்றும் ஃபேஸ்புக் (Facebook) போன்ற தளங்களில் #10 september 2025 மற்றும் #10 september போன்ற ஹேஷ்டேக்குகள் மூலம் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறது.
லண்டனில் உள்ள குவீன் மேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆண்ட்ரூ W.M. ஸ்மித் இந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார். செப்டம்பர் 8 அன்று, பிரதமர் பய்ரூ தனது பட்ஜெட்டுக்கு ஆதரவு கோரி நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள உள்ளார். இதில் அவர் தோல்வியடைந்தால், அவர் பதவி விலக நேரிடும். இது பிரான்சில் ஒரு கடுமையான அரசியல் நெருக்கடிக்கு வழிவகுக்கும். இந்தச் சூழலில், செப்டம்பர் 10-ம் தேதி போராட்டம் மேலும் உத்வேகம் பெறும் என பேராசிரியர் ஸ்மித் கணித்துள்ளார்.
போராட்ட வடிவங்கள்
இந்தப் போராட்டத்தின் கோரிக்கைகள் அரசின் பட்ஜெட் திட்டத்தை எதிர்ப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. இந்த இயக்கம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கிறது:
- பொதுத்துறை சேவைகளில் அதிக முதலீடு
- வேலை குறைப்புகளை நிறுத்துதல்
- அனைத்து விடுமுறை நாட்களையும் பாதுகாத்தல்.
இந்தப் போராட்டத்தில் பின்பற்றப்படும் வழிமுறைகள் தனித்துவமாக உள்ளன:
- வணிக நிறுவன புறக்கணிப்பு: கர்ஃபோர் (carrefour), அமேசான் (Amazon), ஒஷோன் (Auchan) போன்ற பெரிய வணிக நிறுவனங்களை மக்கள் புறக்கணித்து வருகின்றனர்.
- வங்கிப் பணத்தை எடுத்தல்: முக்கிய வங்கிகளில் இருந்து பணத்தை எடுத்து, அரசின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
- அலுவலக முற்றுகை: நகராட்சி அலுவலகங்கள் போன்ற முக்கிய இடங்களை அமைதியான முறையில் முற்றுகையிடுகின்றனர்.
யுனிவர்சிட்டி ஆஃப் நாட்டிங்கம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் ஸ்மித் ‘’இரண்டு விடுமுறை நாட்கள் குறைக்கப்படும் திட்டம் தூண்டுதலாக இருந்தாலும், இந்த இயக்கம் அதைவிட ஆழமானது.மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற உணர்வின் வெளிப்பாடாகவே இந்த போராட்டம் உள்ளது,” என்று குறிப்பிடுகிறார்.
இது வெறும் பட்ஜெட்டுக்கு எதிரான எதிர்ப்பு மட்டுமல்ல, அரசின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியின் பிரதிபலிப்பு ஆகும்.
மஞ்சள் ஜாக்கெட் இயக்கத்தின் சாயல்
‘எல்லாவற்றையும் முடக்குங்கள்’ இயக்கம், 2018-ல் பெரும் போராட்டமாக வெடித்த மஞ்சள் ஜாக்கெட் போராட்டத்துடன் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.
- அரசியல் சார்பின்மை: இரு இயக்கங்களுமே எந்த அரசியல் கட்சி அல்லது தொழிற்சங்கத்துடனும் தொடர்பில்லாதவை.
- தலைவர் இல்லாத இயக்கம்: இரண்டிற்கும் குறிப்பிட்ட ஒரு தலைவர் இல்லை.
- டிஜிட்டல் துவக்கம்: இரு இயக்கங்களும் சமூக வலைத்தளங்களில் இருந்தே தொடங்கப்பட்டன.
- பொதுமக்கள் கோபம்: அரசின் முடிவுகளுக்கு எதிரான மக்களின் கோபமே இந்த இரண்டு இயக்கங்களின் போராட்டங்களுக்கும் அடிப்படைக் காரணம்.
இரு இயக்கங்களுக்கு இடையே முக்கியமான வேறுபாடும் உள்ளது. மஞ்சள் ஜாக்கெட் இயக்கம் முழுக்க முழுக்க பொருளாதாரப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டிருந்தது. ஆனால், ‘எல்லாவற்றையும் முடக்குங்கள்’ இயக்க ஆதரவாளர்கள், “அரசியல் ஈடுபாடு மற்றும் சமூக நலனுக்காக செயல்பட வேண்டும்” என்ற கருத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
ஷான்-ஜாரஸ் அறக்கட்டளை (Fondation Jean-Jaurès) என்ற பிரெஞ்சு சிந்தனைக் குழுவின் சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, இந்த இயக்கத்தின் ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் இடதுசாரித் தலைவரான ஜான்-லூக் மெலன்சானின் கட்சிக்கு வாக்களித்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது இந்த இயக்கத்தின் அரசியல் பின்புலம் குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது. இருப்பினும், இது மஞ்சள் ஜாக்கெட் இயக்கத்தைப் போலவே, பல்வேறு அரசியல் சக்திகளால் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.