பிரான்சின் தேசிய தினமான ஜூலை 14 பாஸ்டில் தினத்தை (Bastille Day) முன்னிட்டு உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், வரும் இரண்டு ஆண்டுகளில் ராணுவ செலவுகளுக்காக கூடுதலாக 6.5 பில்லியன் யூரோ (சுமார் ₹60,000 கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
ரஷ்யாவின் தீவிரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் இணையவழித் தாக்குதல்களை எதிர்கொள்ள இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை விளக்கிய மக்ரோன், 2027ஆம் ஆண்டுக்குள் – அதாவது அவரது இரண்டாவது பதவிக்காலம் முடியும் ஆண்டில் – பிரான்சின் ராணுவ செலவுகள் ஆண்டுக்கு 64 பில்லியன் யூரோவாக (சுமார் ₹6 லட்சம் கோடி) உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார். இது 2017ல் அவர் அதிபராகப் பொறுப்பேற்றபோது இருந்த 32 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீட்டை விட இரட்டிப்பாகும்
பாஸ்டில் தினத்துக்கு முன்தினம் ராணுவத்தினரிடம் உரையாற்றிய மக்ரோன், “1945-ம் ஆண்டுக்குப் பிறகு சுதந்திரம் இவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்ததில்லை.இந்த உலகத்தில் நாம் சுதந்திரமாக இருக்க விரும்பினால், மற்றவர்கள் நம்மை பார்த்து அஞ்ச வேண்டும். மற்றவர்கள் நம்மை பார்த்து அஞ்ச வேண்டுமென்றால், நாம் சக்திவாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அரசு கடன் சுமையைக் குறைக்க தீவிர முயற்சி எடுக்கும்போதும், ராணுவ செலவுகளுக்குத் தேவையான நிதியை பிரான்சால் திரட்ட முடியும் என மக்ரோன் நம்பிக்கை தெரிவித்தார்.
பாதுகாப்பு செலவுகளுக்கான நிதியை அதிகரிப்பதற்கு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும், இடதுசாரி கட்சிகள், சமூக நலன்களை ராணுவ செலவுகளுக்காக அரசு தியாகம் செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளன.
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர் மற்றும் மத்தியகிழக்குப் போர்கள் காரணமாக, அமெரிக்கா தற்போது ‘நிலையற்ற சூழ்நிலையில்’ இருப்பதாக மக்ரோன் கூறினார். இந்த நிலைமை ஐரோப்பாவுக்கே நேரடி ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பாவைப் பாதுகாப்பதில் பிரான்சின் அணு ஆயுதங்கள் என்ன பங்கை ஆற்ற முடியும் என்பது குறித்து, ஐரோப்பிய நாடுகளுடன் விரிவான பேச்சுவார்த்தையை (strategic dialogue) தொடங்கும்படி அந்நாட்டின் உயர்மட்ட ராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில், அணு ஆயுதங்கள் தொடர்பான விவகாரங்களில் ஒத்துழைக்க பிரான்சும் பிரிட்டனும் ஒப்புக்கொண்டன.
ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தங்கள் அணுசக்திப் படைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துகின்றன.
மேக்ரானின் இந்த உரை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை ரஷ்யா குறித்து ஓர் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலிலும், நேட்டோ அமைப்பின் தலைவர் இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டனுக்குப் பயணம் செய்ததாலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ரஷ்யாவின் தொடர்ச்சியான மற்றும் சிக்கலான வான்வழித் தாக்குதல்களை முறியடிக்கப் போராடி வரும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்காக, நேட்டோ கூட்டாளி நாடுகளுக்கு அவற்றை விற்பதற்கான திட்டங்களை டிரம்ப் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.