சைக்கிள் நகரமாகும் பாரீஸ்!

by Editor
0 comment

பாரீஸ் நகரில் சைக்கிளில் வலம் வருபவர்களை அச்சமற்ற போர் வீரர்களின் இனத்தவர்கள் என்றே நான் கருதுவதுண்டு. பெரும்பாலும் ஆண்கள்தான், தலைக்கவசம், சங்கிலிப் பூட்டுகள், பிரதிபலிப்பு உடை உள்ளிட்ட சாதனங்கள் போன்றவற்றைத் தரித்துக்கொண்டு போருக்குத் தயாரானதைப் போல் இருப்பார்கள். இந்த நகரத்தில் முன்பு இருந்த சில சைக்கிள் தடங்கள் திடீர் திடீரென்று திரும்பும் பேருந்துகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும் அல்லது ஈவிரக்கமற்றவர்கள் ஓட்டிச்செல்லும் வாகனங்களுக்கு நடுவில் அகப்பட்டுக்கொள்ளும்; இந்தத் தடங்கள் மரணத்தின் தாழ்வாரங்கள் என்று அறியப்பட்டிருந்தன.

ஆபத்தான காரியங்களில் நான் ஈடுபட மாட்டேன், எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். நான் இங்கே வாழ்ந்த முதல் 16 ஆண்டுகளில் நான் ஒருபோதும் சைக்கிள் ஓட்டியதில்லை. ஆனால், சமீபத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டது; மெட்ரோ ரயிலில் சென்றால் எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிடும் என்று அஞ்சியதால் மட்டுமல்ல இந்த மாற்றம். நகரங்களுக்கே உரிய அதீத தைரியத்தால், இன்னமும் சைக்கிளோட்டிகளின் சொர்க்கமாக மாறிவிட்டிராத பாரீஸ், சைக்கிள்களின் நகரமாக மாறிக்கொண்டிருக்கிறது.

பிரஸ்ஸல்ஸ், பெர்லின் போன்ற நகரங்கள் இந்த விஷயத்தில் முன்னேற்றமடைந்துவருகின்றனதான். சைக்கிள் ஓட்டுவதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை 1970-களிலிருந்து உருவாக்கிவரும் ஆம்ஸ்டெர்டாம், கோபன்ஹேகன் போன்ற ஐரோப்பாவின் சைக்கிள்களின் உண்மையான தலைநகரங்களைவிட பாரீஸ் இன்னமும் பின்தங்கிதான் இருக்கிறது.

மாற்றத்தின் வேகம்

ஆனால் பாரீஸில் நிகழ்ந்த மாற்றத்தின் வேகம் கவனிக்கத் தக்கது. பெருந்தொற்று காரணமாக இடையில் பாரீஸுக்கு வராமல் இருந்த சுற்றுலாப் பயணிகள் தற்போது வருவார்களென்றால் பிரான்ஸின் தலைநகரில் குறுக்கும்நெடுக்குமாகச் செல்வதும், தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பதும், அருகிலுள்ள புறநகர்ப் பகுதிகளை இணைப்பதுமான சைக்கிள் தடங்களைக் காணலாம். லூவர் அருங்காட்சியகம் வழியாகச் செல்லும் ரிவோலி வீதியில் கார்கள் நுழைவதற்கு முற்றிலும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. பாரீஸ் வாகன ஓட்டிகள் இப்போது சைக்கிள்களை சாலைகளில் எதிர்பார்க்கலாம்.

என்ன நடந்தது? சைக்கிள் ஓட்டுவது தற்கொலை முயற்சி போல உணரப்பட்ட இடம் என்பதிலிருந்து என்னைப் போன்ற பித்தர்கள்கூட நகரில் வலம்வரும் விதத்தில் பாரீஸ் மாறியது எப்படி? இதற்கான பெரும்பாலான புகழ், பாரீஸின் மேயராக 2014-ல் ஆன ஆன் ஹிதால்கோவையே சேரும். அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் போக்குவரத்திலிருந்து தனியாகப் பிரித்து, சைக்கிள்கள் மட்டும் ஓடும் தடங்கள் உருவாக்குவதற்கான ‘சைக்கிள் திட்டம்’ என்ற ஐந்தாண்டுத் திட்டத்தை பாரீஸ் மாநகராட்சி உருவாக்கியது. உடனடியாக, பிரதானப் பெருஞ்சாலைகள் சாலையமைப்புப் பணிகளுக்கான இடமாக மாறின. இந்தத் திட்டம் நிறைவேறுவதற்குச் சாத்தியமே இல்லை என்று காவல் துறையினர் எச்சரித்தனர். இந்தத் திட்டம் உரிய காலத்தைவிடப் பின்தங்கியிருப்பதாக சைக்கிள் ஆதரவுக் குழுக்கள் முறையிட்டன. கார்களின் ஆதரவாளர்களோ ‘ஒவ்வொரு நாளும் பாரீஸில் மாபெரும் சைக்கிள் பந்தயம் நடைபெறும்’ என்று எச்சரித்தனர்.

எனினும் பணிகள் மும்முரமாக நடைபெற்றன. “ஒரு திட்டத்தைத் தீட்டி எங்கெங்கும் சைக்கிள்களை வைப்பது எளிது. ஆனால், ‘சரி, எனக்குப் புரிகிறது, எனினும் இதை எப்படியாவது நாம் நிறைவேற்றப் போகிறோம்’ என்று அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் சொல்லவில்லையென்றால், அதைச் செய்துமுடிக்க முடியாது” என்கிறார் சைக்கிள் சங்கம் ஒன்றைச் சேர்ந்த ழான்-செபஸ்தீன் கேத்தியே.

சைக்கிள் திட்டம்

2019 டிசம்பரில் ஒரு முக்கியமான தருணம் அமைந்தது. அப்போது தேசிய அளவில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். அதனால் பெரும்பாலான பேருந்துகளும் ரயில்களும் பல மாதங்களுக்கு ஓடாமல் நின்றுவிட்டன. ‘சைக்கிள் திட்டம்’ அப்போது முடிவுக்கு வருவதற்கு வெகு காலம் இருந்தது. ஆயினும் போதுமான அளவு தடங்கள் தயாராக இருந்தன. அவற்றினூடாக மக்கள் தங்கள் அலுவலகங்களுக்கு சைக்கிள் மிதித்துச்சென்றனர். கூடிய விரைவில் சாம்ஸ்-எலீஸே நிழற்சாலையில் கற்கள் பாவிய சைக்கிள் தடங்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்பட்டன.

பிறகு, கரோனா பெருந்தொற்று வந்து பிரான்ஸ் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட போக்குவரத்தே இல்லாத நிலையில்தான், கார்களுக்கு எவ்வளவு இடத்தை நாம் கொடுத்துவந்திருக்கிறோம் என்பதை என்னைப் போன்ற நகர்ப்புறம் சாராதவர்கள்கூட திடீரென்று உணர்ந்தோம். பாரீஸ் எவ்வளவு சிறியதென்பதையும் எந்த அளவுக்குப் பெரும்பாலும் தட்டையாக இருக்கிறது என்பதையும் நாங்கள் கண்டோம். இந்த நகரின் பிரதானப் பகுதி லண்டனின் அளவில் 7%-க்கும் நியூயார்க் நகரத்தின் அளவில் 13%-க்கும் இணையானது. புறநகர்ப் பகுதிகள்கூட அந்த அளவுக்குத் தூரமானவையல்ல. குறிப்பாக, தற்போது மின்சார சைக்கிள்கள் வேறு சேர்ந்திருக்கும்போது.

என்னைப் போன்ற குடிநபர்கள் நகர்ப்புறம் சார்ந்த வெளிப்பாடுகளைத் தரிசித்துக்கொண்டிருக்கும்போது, நகரத்தின் அதிகாரத் தரப்பினர் தொற்றுநோயியல் சார்ந்த ஒரு பிரச்சினையை எதிர்கொண்டனர்: பாரீஸ்வாசிகள் பொது முடக்கம் முடிந்த பிறகு அவர்களால் முன்பைப் போல மறுபடியும் பேருந்துகளிலும் மெட்ரோ ரயில்களிலும் கூட்டம் கூட்டமாகச் செல்ல முடியவில்லை.

வாரந்தோறும் செயல்பாட்டாளர்களுடனும் தொழில்நுட்பக் குழுவினருடனும் காணொளி சந்திப்புகளை நடத்தினார்கள். தடங்களை மக்கள் உள்வாங்கிக்கொள்ளும் விதத்தில் நகரத்தின் மூன்று மெட்ரோ ரயில் தடங்களைத் தொட்டுச்செல்லும் வகையில் சைக்கிள் தடங்களுக்கு வரைபடம் உருவாக்கினார்கள். அந்தப் பிராந்தியத்தின் அரசு ஒரு நகர்ப்புறத் திட்டத்துக்குப் பகுதியளவு நிதியுதவி செய்வதாக அறிவித்திருக்கிறது.

கரோனா சைக்கிள் தடங்கள்

முதல் பொதுமுடக்கத்தின்போதும் அது முடிந்தவுடனும் சாலைப் பணியாளர்கள் பாரீஸிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் 100 மைல் தூரங்களுக்குத் தற்காலிக ‘கரோனா சைக்கிள் தட’ங்களைப் போட்டிருக்கிறார்கள். வெறும் வண்ணங்களையும் சாலையில் தடுப்பு அமைப்புகளைப் பதித்தும் இந்தத் தடங்களை உருவாக்கியிருக்கிறார்கள். திடீரென்று பாரீஸின் பல பகுதிகளிலும் ‘சைக்கிள் மட்டும் தடங்கள்’ உருவாகிவிட்டன.

பல்லாண்டுகளாக இந்த விஷயம் தொடர்பாகக் குரலெழுப்பிவந்த செயல்பாட்டாளர்களெல்லாம் திடீரென்று தங்கள் கண் முன்பு சைக்கிள் தடங்கள் உருவாவதைக் கண்டார்கள். “கனவு போல் இருக்கிறது. வெறும் பத்து நாட்களில் நாங்கள் 10 ஆண்டுகளில் செய்வதைவிட அதிகமாகச் செய்திருக்கிறோம்” என்கிறார் ‘கிரேட்டர்-பாரீஸ் பைசைக்கிள் கலெக்டிவ்’ அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஸ்தெய்ன் வான் ஊஸ்த்தெரென். பாரீஸ்வாசிகள் பொதுமுடக்கத்திலிருந்து வெளிவந்தபோது, வைரஸ் மீதான அச்சமும் புதிய பாதுகாப்பான பாதைகளும் அவர்களிடத்தில் உளவியல்ரீதியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. சைக்கிள் ஓட்டும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. போக்குவரத்து பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் சில வீதிகளில் கார்களைவிட சைக்கிளோட்டிகள் அதிகம் காணப்பட்டார்கள். நீண்ட தொலைவு பயணித்து அலுவலகம் செல்பவர்களுக்கு மின்சார சைக்கிள்கள் ஏதுவாக இருந்தன. ஆகவே, புதிய தடங்கள் நகரத்தின் நவநாகரிகவாசிகளுக்கு மட்டுமானவையல்ல.

புதிய நெருக்கம்

நான் ஒரு சைக்கிள் வாங்கியதும் அது நடைமுறைக்கு உகந்தது மட்டுமல்ல என்பதைக் கண்டறிந்தேன்; எனக்கு அந்த உடற்பயிற்சியும், கைபேசி, கணினி திரைகளைப் பார்க்காத அனுபவமும் பாரீஸின் இயற்கைச் சூழலுடனான புதிய நெருக்கமும் பிடித்திருந்தது. 16 ஆண்டுகள் கார்களிலும் மெட்ரோ ரயிலிலும் அல்லது நடந்தும் சென்றுவிட்டு சேன் நதிக்குக் குறுக்காக சைக்கிள் மிதித்துக்கொண்டுசெல்வது பேரனுபவம் என்பதைக் கண்டறிந்தேன். இது முழுக்கக் கவித்துவமான விஷயம் இல்லை. பெரும்பாலான சைக்கிள் தடங்கள் ஆபத்தானவையாகவும் முழுமையடையாதவையாகவும் இருக்கின்றன. இதில் முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். தேவையான அளவு சைக்கிள் தடங்களை உருவாக்குவது கடினமானது, ஆனால் அதன் பின்பு “அது பல்கிப்பெருகும் விளைவுகளை ஏற்படுத்தும்” என்கிறார் வான் ஊஸ்த்தெரன். “வாக்காளர்களில் பெரும்பாலானோர் சைக்கிள்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், ஒரு அரசியலராக நீங்கள் மேலும் அதிக சைக்கிள் தடங்களை உருவாக்கவே முயல்வீர்கள். அதுதான் தற்போது பாரீஸில் நடந்துகொண்டிருக்கிறது” என்கிறார் அவர்.

பாரீஸ் நகரத்தின் சைக்கிள் தடங்களை மேயர் ஹிதால்கோ நீடிக்கக் கூடியவையாக ஆக்கியிருக்கிறார். 2024-ல் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை பிரான்ஸ் நடத்தும்போது பாரீஸ் நகரத்தை 100% சைக்கிள் ஓட்டுவதற்கு உகந்த நகரமாக ஆக்கப்போவதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

தகவல் : HINDUTAMIL.IN

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech