செவ்ரானில் உள்ள வணிக வளாகத்தின் அருகே போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள போலி சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒல்னே சுபாவின் (Aulnay-sous-bois) குற்றத்தடுப்பு பிரிவு காவலர்கள் இன்று நடத்திய தேடுதல் வேட்டையின் போது கிட்டத்தட்ட 14,000 சிகரெட் பெட்டிகளை கைப்பற்றியுள்ளனர்.
செவ்ரான் போதோத்தில் (Sevran-Beaudottes) உள்ள ஒரு வணிக வளாகத்தின் அருகே சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களை நோட்டமிட்ட காவல் துறையினர், அங்கு தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது ஒருவர் அடிக்கடி அவ்விடத்தின் அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்வதும் வருவதுமாக இருந்துள்ளார். ஒவ்வொரு முறை அவர் வரும்போதும் பெரிய பை ஒன்றை கொண்டு வந்துள்ளார். இதனை உறுதி செய்த காவல்துறையினர் அந்நபரை* கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
மேலும், அந்த இடத்தை சோதனையிட்டதில் கிட்டத்தட்ட 14000 போலி சிகரெட் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதன் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து காவல்துறையினர் கள்ளத்தனமாக சிகரெட் விற்பனையை தடுக்கும் விதமாக சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்து 2021 ஆம் ஆண்டு லா குர்நேவில் முப்பதாயிரம் சிகரெட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டதும்; கடந்த ஆண்டு மட்டும் சேன் சாந்தேனி மாவட்டத்தில் ஏழு லட்சத்து பதினான்காயிரம் போலி சிகரெட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.