இருப்புப் பாதையை கடக்க முயன்ற போது டிராம் வண்டி மோதி படுகாயமடைந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
பாரீசின் 20-வது வட்டத்தில் உள்ள T3b டிராம் பாதையில் நேற்று (புதன்கிழமை) இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
டிராம் செல்லும் வழியில் திடீரென குறுக்கே ஓடி வந்த சிறுவனைக் கண்ட டிராமின் ஓட்டுநர், உடனடியாக எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளார்.
பல முறை ஒலி எழுப்பியும், அவசர நிறுத்தத்தை செயல்படுத்தியும் அச்சிறுவன் மீது டிராம் வண்டி எதிர்பாராத விதமாக மோதியது.
உடனடியாக அங்கு விரைந்த அவசர மீட்பு பிரிவினர் படுகாயம் அடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முற்றிலும் சுயநினைவின்றி இருந்த குழந்தை கோமாவுக்கு சென்ற நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையினர் விசாரணையில், பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து எப்படியோ தப்பித்த 10 வயது சிறுவன் டிராம் பாதையை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக டிராம் மோதியது தெரிய வந்தது.
இச்சம்பவத்தையடுத்து டிராமின் ஓட்டுனருக்கு போதை பரிசோதனை செய்யப்பட்டது.
‘ஆய்வில் ஓட்டுனர் மது அருந்தவில்லை என்பது தெளிவாகியுள்ளது’ என்று பாரிசின் இருபதாவது வட்ட மேயர் எரிக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக RATP போக்குவரத்து நிறுவனம் விசாரணை மேற்கொண்டுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.