உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் உக்ரைன் இராணுவ வீரர்கள் 30 பேர் பலி!
கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் இடையே போர் தொடங்கியது. இரண்டு வருடங்கள் தாண்டியும் தொடரும் இந்த போரால் இரு நாட்டு மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் பொருளாதார உதவி மற்றும் ஆயுதகள் அளித்து வருகின்றன.
ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்து கொண்டிருக்கும் இந்த போரை நிறுத்தும்படி ஐ. நா. மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வந்தன. இருப்பினும், இந்த இரு நாடுகளும் தொடர்ந்து போரிட்டு வருகின்றன.
கடந்த (23/03/2024) சனிக்கிழமை அன்று ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனின் தலைநகர் கெய்வ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து.மக்களுக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டது.
இந்த தாக்குதலின் போது ரஷ்யா 18 ஏவுகணைகளை வீசியது. இதில், உக்ரைனின் தேசிய பல்கலைக்கழகம், சுகாதார நிலையம் உள்பட பல்வேறு கட்டிடங்கள் தீப்பிடித்து சேதமடைந்தன.
இதில் அந்த பல்கலைக்கழகத்தில் முகாமிட்டு இருந்த உக்ரைன் ராணுவ வீரர்கள் 30 க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.